சத்தீஸ்கரில் வளர்ச்சி என்பது காங்கிரஸ் தலைவர்களின் கஜானாவில் மட்டுமே உள்ளது: பிரதமர் மோடி விமர்சனம்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊழலும், குற்றங்களும் அதிகரித்து காணப்படுவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.26ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் எஃகு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி; ஏழை நலமே எனது நோக்கம். மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும்.

இதனால் நாட்டின் ஒவ்வொரு மூலையும் வளர்ச்சி அடைய வேண்டும். தேசத்தை தன்னிறைவாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மாநிலங்கள் போட்டி போடுகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊழலும், குற்றங்களும் அதிகரித்து காணப்படுகிறது. சத்தீஸ்கரில் வளர்ச்சி என்பது காங்கிரஸ் தலைவர்களின் கஜானாவில் மட்டுமே உள்ளது. சத்தீஸ்கரின் மாநிலத்தில் வளர்ச்சி என்பதே துளியும் இல்லை என்பதால் இங்கு ஆட்சிமாற்றம் தேவை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மையினருக்கே முதல் உரிமை இருக்கிறது’ என்று கூறியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால், அதிக மக்கள் தொகைகொண்ட சமூகத்தினரே, அந்த உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டும் என இன்று காங்கிரஸ் சொல்கிறது. அப்படியானால், சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க வேண்டும் என்கிறதா காங்கிரஸ்? பெரும்பான்மையாக இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை என்றால், அதிக மக்கள் தொகை கொண்ட இந்துக்கள், அந்த உரிமைகளை எடுத்துக்கொண்டால் சரியாகுமா? என்றும் கேள்வி எழுப்பினார்

The post சத்தீஸ்கரில் வளர்ச்சி என்பது காங்கிரஸ் தலைவர்களின் கஜானாவில் மட்டுமே உள்ளது: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: