இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஒரு மின் இணைப்பிற்கு ஒரு ஆதார் எண்ணை மட்டுமே இணைக்க முடியும் என்றும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால், மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். எனவே ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட வழக்கில் அடிப்படை தகுதி இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி சீராய்வு மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்தார். அந்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிபதி அபய் ஒகே முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மேற்கண்ட மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலுக்கு மனுதாரர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
The post மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.