தபால் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு: பொதுமக்கள் குழப்பம்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் தபால் அலுவலகத்தில் இந்தியில் ஒட்டப்பட்ட அறிவிப்பு பலகையால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம், விளாத்திகுளம் – மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பதிவு தபால், விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இங்கு வந்து செல்கின்றனர். மேலும் தற்போது ஆதார் திருத்த பணிகளும் தபால் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதால் இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இணையவழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய முழுமையான தகவலும் மேலும் அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் அதற்கான வழிமுறைகளும் முற்றிலும் இந்தியில் டைப் செய்யப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் என்ன தகவல் தெரிவித்துள்ளனர் என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இங்குள்ள மக்களுக்கு இந்தி தெரியாததால் சம்பந்தப்பட்ட தபால் துறையினர் இணைய வழி புகார் இணையதளம் மற்றும் தொலைபேசி எண் வழிகாட்டி முறைகள் அடங்கிய போஸ்டரை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post தபால் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு: பொதுமக்கள் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: