கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தகுதி வாய்ந்த 4 லட்சத்து 85 ஆயிரத்து 4 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் முழுநேர ரேஷன் கடைகள் 34, பகுதி நேர ரேஷன் கடைகள் 2, கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் முழுநேர ரேஷன் கடைகள் 524, பகுதி நேர ரேஷன் கடைகள் 504, சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் முழுநேர ரேஷன் கடைகள் 30 என மொத்தம் 1094 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹1000 ரொக்கம் என பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்பு பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி லட்சுமணராவ் தெருவில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். அந்த டோக்கனில் பொங்கல் பரிசு வாங்க வேண்டிய நாள்-நேரம், கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர்கள் பெயர் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறியதாவது: பொங்கல் பரிசுத்தொகுப்பு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 55,882 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் 30,314 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மத்தூர் வட்டாரத்தில் 29,329 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஊத்தங்கரை வட்டாரத்தில் 47,068 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அரசம்பட்டி வட்டாரத்தில் 23,095 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பர்கூர் வட்டாரத்தில் 55,014 ரேஷன் கார்டுதாரர்களுக்கும்,
வேப்பனஹள்ளி வட்டாரத்தில் 26,105 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஓசூர் வட்டாரத்தில் 73,965 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், சூளகிரி வட்டாரத்தில் 43,465 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கெலமங்கலம் வட்டாரத்தில் 36,371 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், தளி வட்டாரத்தில் 21,718 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அஞ்செட்டி வட்டாரத்தில் 25,557 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மதகொண்டப்பள்ளி வட்டாரத்தில் 17,121 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் என மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 4 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. தகுதி பெறாத ரேஷன் கார்டுதாரர்கள் 77,890 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 4.85 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு appeared first on Dinakaran.