குளச்சல்: குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள். பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதிகளில் தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்து உள்ளது. கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை.
இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டாத நிலையில் ஒரு சில கட்டுமர மீனவர்கள் கடந்த வாரம் முதல் மீண்டும் கடலுக்கு சென்று வருகின்றனர். அவர்களின் வலைகளில் ஓரளவு மீன்கள் கிடைத்தது. இதற்கிடையே அக்னி நட்சத்திர வெயிலால் அதிக வெப்பத்தை தாங்கி இருந்த குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் மிதமான தட்ப வெப்ப நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் 21 ம் தேதி வரை (நாளை) கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ.வரை பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இதனால் கட்டுமர மீனவர்கள் மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துள்ள நிலையில் இன்று (திங்கட்க்கிழமை) காலை முதல் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடற்கரை பகுதியில் காற்றும் வீசுகிறது. இதனால் குளச்சல் பகுதி வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது. ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய 20 விசைப்படகுகளில் ஓரளவு காரை, சூரை, கணவாய் மீன்கள் கிடைத்தன. அவற்றை விசைப்படகினர் ஏலக்கூடத்தில் இறக்கி வைத்து விற்பனை செய்தனர்.
The post குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை appeared first on Dinakaran.