மூலைக்கரைப்பட்டி அருகே குளம் நிரம்பி உபரி நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது

*வீடுகளையும் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு : மூலைக்கரைப்பட்டி அருகே குளத்து நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் 6 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் நாசமானது. மேலும் வீடுகளையும் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணி கிராமம் உள்ளது. இங்குள்ள குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டிலும் மணிமுத்தாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் குளம் நிரம்பியது. ஆனால் குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் அடைக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து குளத்தின் உபரிநீர் மறுகால் வழியாக வெளியேற முடியாத நிலை எழுந்துள்ளது. இதையடுத்து குளம் நிரம்பி உபரிநீர் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் 6 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

நாசமான பயிர்கள் சிந்தாமணியை சேர்ந்த சண்முகம் மகன் முப்பிடாதி, சங்கரன் மகன் குமார் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் அவர்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல குளத்தின் நீர் சிந்தாமணி அருந்ததியர் காலனிக்குள்ளும் புகுந்து அங்குள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.

குளத்து நீருடன் சாக்கடையும் கலந்து வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 மாதமாக நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடும் நிலவுகிறது.
சுகாதார கேட்டால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிக்குள்ளும், விளைநிலங்களிலும் தேங்கி நிற்கும் குளத்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூலைக்கரைப்பட்டி அருகே குளம் நிரம்பி உபரி நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: