வேலூர் சரகத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சாலைகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

*ரோந்து வாகனங்களை ஆய்வு செய்த டிஐஜி தகவல்

வேலூர் : வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சாலைகளில் நின்று கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரோந்து வாகனங்களை ஆய்வு செய்த டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் வாங்கப்பட்டுள்ளன.

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதனை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து காவல் நிலையங்களின் இருசக்கர ரோந்து வாகனங்களையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது ரோந்து வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும், ஒளி பிரதிபலிப்பான்கள் உள்ளிட்டவற்றை பழுது ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். முதற்கட்டமாக காட்பாடி சப்-டிவிஷனுக்கு பேரிகார்டுகளை வழங்கினார். பின்னர் டிஐஜி முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டுகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டன. விபத்து தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பேரில் விபத்து நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 95 விபத்துகளும், பிப்ரவரியில் 89, மார்ச்சில் 73 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஜனவரியில் 26 பேர், பிப்ரவரியில் 18 பேர், மார்ச்சில் 16 பேரும் விபத்தில் இறந்துள்ளனர்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதே விபத்துகளுக்கு காரணம். மாவட்டத்தில் ₹30 லட்சத்தில் சுமார் 485 பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இவை அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட உள்ளது. வேலூரில் இயங்கி வந்த 5 தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தன. தற்போது அவர்களுக்கு கூடுதலாக விபத்துகள் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதியாமல் அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 53 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் காவல்துறையும், விஐடியும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எங்கு, எதனால் விபத்து ஏற்படுகிறது? விபத்தை எவ்வாறு தடுப்பது? என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வேலூர் சரகத்தில் விபத்து எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. எனவே வேலூர் சரகத்தில் அனைத்து காவலர்களும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சாலைகளில் நின்று கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், பயிற்சி ஏஎஸ்பி பிரசன்னகுமார், டிஎஸ்பிக்கள் மனோகரன், பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

வெளி மாநில குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணிப்பு

வெளி மாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் ஸ்ட்ராமிங் மூலம் ரயில்வே நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் ஒப்பிடும்போது மார்ச் மாதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன. கிராமங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.

The post வேலூர் சரகத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சாலைகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: