பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்ற அனுமதிக்க வேண்டும்.. பால், மருத்துவப் பொருட்களுக்கான பயன்பாட்டை சுட்டிக் காட்டி தமிழக அரசு மனு

சென்னை : தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதிக் கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், பிளாஸ்டிக் தடை தொடர்பான 2020ம் ஆண்டு அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிஸ்கட்டுகள், எண்ணெய், மருத்துவப் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை பிளாஸ்டிக் உறைகளிலேயே அடைத்து விற்கப்படுவதாக அரசு குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள் சந்தையில் இல்லாததால் தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8,000 பிளாஸ்டிக் ஆலைகள் ரூ.3,200 கோடி ஜிஎஸ்டி வரி பங்களிப்பை வழங்குவதாக கூறியுள்ள அரசு, பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்படுவதால் உள்ளூர் தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவதால் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் லட்சியம் வீழ்த்தப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்ற அனுமதிக்க வேண்டும்.. பால், மருத்துவப் பொருட்களுக்கான பயன்பாட்டை சுட்டிக் காட்டி தமிழக அரசு மனு appeared first on Dinakaran.

Related Stories: