புதிய திட்டம் இல்லை; சலுகை இல்லை; எதுவுமே இல்லை பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிப்பு: தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டதால் மக்கள் கொதிப்பு

* பேரிடர் நிவாரண நிதி பற்றி மூச்சுவிடவில்லை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி இல்லை, புதிய ரயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டங்களும் இடம்பெறவில்லை,

புதுடெல்லி: மக்களவையில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும், சலுகையும் பட்ஜெட்டில் இல்லை. நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம் பெறவில்லை. மக்களவையில் நேற்று 2024-25ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க துவங்கினார்.

ஒன்றரை மணி நேரம் நேர பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட் என்பதால் இதில் சலுகைகள் பல அறிவிக்கப்படும் என்று மக்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலமும் தங்களது முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்தன. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், ‘சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் தனது ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் பீகார் மாநிலத்துக்கு மட்டும் ரூ.60 ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்தார். ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தருவதாக அறிவித்தார். இது தவிர இந்த இரு மாநிலங்களுக்கும் பல்வேறு சலுகைகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசு பீகாரில் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளின் தயவில்தான் பதவியில் நீடிக்கிறது.

இதனால், இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கேட்டு பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மற்ற மாநிலங்களுக்கும் திட்டங்கள், சலுகைகள், நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அப்படி ஒரு அறிவிப்பு எதுவும் நிர்மலா சீதாராமனின் உரையில் இடம் பெறவில்லை.

அவர், தமிழ்நாடு என்ற வார்த்தையை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள், திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருக்கவில்லை. தமிழ்நாட்டுக்கென எந்த திட்டமோ, சலுகைகளோ பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்த அறிவிப்பு கூட இடம்பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து செயல்படுத்தி வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் பெரும் கடன் சுமையில் இருந்து வரும் தமிழக அரசுக்கு, இது கடுமையான சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலங்களின் ஒட்டுமொத்த வரி வருவாயில் பெரும் பங்கை ஒன்றிய அரசு பறித்துக்கொண்ட நிலையில், மேலும் மேலும் கடன் வாங்கும் சூழலில் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், புதிய ரயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டங்கள் பற்றியும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கைகளை எழுப்பினர். ஆனால் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் மழை நிவாரண அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட்டில் வெளியிட்டார்.

இதனால் தமிழ்நாடு, கேரளா எம்பிக்கள் மக்களவையில் கோஷமிட்டனர். மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப் பட்டுள்ளதால் தமிழக மக்கள் கொதிப் படைந்துள்ளனர். இதே போல், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, அரியானா, உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

* ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

* ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை திருப்திபடுத்த பீகார், ஆந்திராவுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

* கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, அரியானா, உ.பி மாநிலங்களுக்கும் புதிய திட்டங்கள் இல்லை.

The post புதிய திட்டம் இல்லை; சலுகை இல்லை; எதுவுமே இல்லை பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிப்பு: தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டதால் மக்கள் கொதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: