வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனமான சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துவரம் பருப்புக்கு பதில், அதே சத்துக்களை கொண்ட, விலை குறைவான மசூர் பருப்பை பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
பின்னர், மசூர் பருப்பை போல தோற்றமளிக்கும் கனடா மஞ்சள் பருப்பும் புழக்கத்தில் உள்ளதால் மசூர் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அறிவியல் முறைகளை கையாண்டு மசூர் பருப்பை அடையாளம் கண்டு அதை பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மசூர் பருப்புக்கு அனுமதியளித்து தமிழக அரசால் 2017ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய் என்ற அடிப்படையில் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். எனவே, துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post பொது வினியோக திட்டத்தின்கீழ் மசூர் பருப்பையும் கொள்முதல் செய்ய கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.