செல்லப்பிராணிகளுடன் யோகா செய்யலாமே!

நன்றி குங்குமம் தோழி

மனம் மற்றும் உடலை நிதானப்படுத்த மிகவும் முக்கியமானது யோகாசனம். இதனை தினமும் செய்தால், நாம் எப்போதும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இந்த யோகாசனத்தை நாம் விரும்பியவருடன் சேர்ந்து செய்யும் போது அந்த உற்சாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் யாரும் இல்லை. நம் எல்லோருடைய மனதையும் லேசாக்கும் செல்லப்பிராணிகள்தான். யோகாசனம் செல்லப்பிராணிகளுடனா? ஆம், என்கிறார்கள் தோழிகளான
சுபஸ்ரீ, ஸ்வாதி, சிந்துஜா.

‘‘நான் சென்னை பொண்ணு. சென்னையில் இரண்டு வருடம் முன்பு செல்லப்பிராணிகளுடனான யோகாவினை துவங்கினோம்’’ என்று பேச ஆரம்பித்தார் சுபஸ்ரீ. ‘‘நான், ஸ்வாதி மற்றும் சிந்துஜா மூவரும் ஒன்றாக கல்லூரியில் படிச்சோம். ஸ்வாதி பள்ளி காலத்தில் இருந்தே ப்ளூ கிராசுடன் இணைந்து செயல்பட்டு வந்தாள். அவளுடன் நாங்களும் இணைந்து தொண்டர்களாக வேலை பார்க்க ஆரம்பித்தோம். கல்லூரி படிப்பு முடிச்சிட்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகும் கிடைக்கும் ேநரத்தில் எங்களின் சேவை தொடர்ந்தது.

சென்னை மட்டுமில்லாமல் நாங்க வேலை காரணமாக வேறு ஊர்களுக்கு சென்றாலும் அங்குள்ள செல்லப்பிராணிகளின் காப்பகத்திற்கு எங்களால் முடிந்த சேவையினை செய்ய ஆரம்பித்தோம். அப்பதான் ஒவ்வொரு காப்பகத்திற்கும் தனிப்பட்ட தேவைகள் இருப்பதை அறிந்தோம். அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்ற விரும்பினோம். இந்த எண்ணம் எங்களுக்கு கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே மனதில் நெருடிக் கொண்டிருந்தது.

ஆனால் அவர்களுக்கு என்ன செய்வதுன்னு அப்ப தெரியல. முதலில் செல்லப்பிராணிகளுக்கான உணவகம் ஆரம்பிக்க நினைச்சோம். அதன் மூலம் காப்பகத்தில் இருக்கும் செல்லப்பிராணிகளை தத்துக் கொடுத்து அவர்களுக்கு நிரந்தர வீட்டினை அளிக்க திட்டமிட்டோம். ஆனால் நாங்க படிச்சி முடிச்சிட்டு வெளியே வந்த போது, இதே கான்செப்ட்டில் நிறைய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. அதனால் கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு ஒரு நலத்திட்டம் அமைக்க முடிவு செய்தோம்’’ என்றவர் பாகாவின் (Pawga) செயல்பாடு குறித்து விளக்கினார்.

‘‘இணையத்தில் நிறைய ரீல்ஸ், வீடியோவினைப் பார்த்து இருப்பீர்கள். அதில் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்கள் நாய்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்வார்கள். இது வெளிநாட்டில் பிரபலம். அதையே நம்ம ஊரில் செய்யலாம்னு நினைச்சோம். அது குறித்து நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டோம். குறிப்பா கோவிட் நேரத்தில் பலரிடம் பேசிய போது அவர்கள் எல்லோரும் ஒருவித மனஅழுத்தத்தில் இருப்பது தெரியவந்தது.

கோவிட் பலரின் வாழ்க்கையினை புரட்டி போட்டது. சிலர் நெருங்கியவர்களை இழந்தனர். ஒரு சிலருக்கு வேலை இல்லாமல் போனது. இப்படி பலதரப்பட்ட மக்களை நிலைகுலைய செய்திருந்தது. அதுவே அவர்களுக்கு பெரிய அளவில் மனஉளைச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறினார்கள். சொல்லப்போனால் நானும் அந்த சமயத்தில் மனக்கவலை மற்றும் பதட்டம் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். மனம் சார்ந்த பிரச்னைக்கு யோகாசனம் ஒரு நல்ல தீர்வு. மேலும் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மனஉளைச்சலுக்கான சிறந்த மருந்து செல்லப்பிராணிகள் தான் என்பதை உணர்ந்திருந்தார்கள். நம்முடைய மனதில் ஏற்படும் பதட்டத்தினை அவர்கள் எளிதாக உணர்ந்து அதற்கு ஏற்ப நம்மை ஆறுதல் படுத்துவார்கள்.

நான் ஏழு நாய்களை வளர்க்கிறேன். எனக்கு உடம்பு சரியில்லைன்னா நல்லாவே தெரியும். அதுவே நான் உற்சாகமா இருந்தா, அவங்களும் துள்ளிக் குதிக்க ஆரம்பிச்சிடுவாங்க. எனக்குள் ஏற்பட்ட அந்த தனிப்பட்ட அனுபவம் மற்றும் நாங்க மூவரும் இணைந்து செய்யும் பணி எங்களை காப்பகத்தில் இருக்கும் செல்லப்பிராணிகளுடன் யோகாசனம் குறித்து சிந்திக்க வைத்தது. அப்படித்தான் ‘பாகா’ (Pawga) ஆரம்பமானது.

இது ஒரு வகையில் நமக்கு மட்டுமல்ல செல்லப்பிராணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஒன்று இருவருக்குமே ரிலாக்சேஷன் கிடைக்கும். சிலர் தத்து எடுக்க முன்வருவார்கள். இதில் வரும் வருமானம் காப்பகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். கோவிட் காலத்தில் பலர் செல்லப்பிராணிகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். ஆனால் நிலைமை மாறிய பிறகு அவர்களால் அதனை பார்த்துக் கொள்ள முடியவில்லை. தெருவிலும் குப்பைத்தொட்டியிலும் விட்டு சென்றார்கள். அவர்களை கட்டி போட்டுவிட்டு சென்றவர்களும் உண்டு. அவ்வாறு விடப்பட்ட நாய்களை சில நல்ல உள்ளங்கள் ப்ளூகிராஸ் போன்ற காப்பகத்தில் சேர்ப்பார்கள். அவ்வாறு விடப்பட்டவர்களுடன் தான் ஒரு மணி நேர யோகாசனம்.

சென்னையில் ப்ளூ கிராஸ் ஆப் இந்தியா, பெங்களூரில் சார்லி அனிமல் சென்டர் என அந்தந்த நகரங்களில் உள்ள நாய்களின் காப்பகத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பிச்சோம். ஒரு செஷனில் 25 நபர்கள் மட்டும் தான் அனுமதி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாய்குட்டி என 25 நாய்கள் இருக்கும். எல்லாம் குட்டி நாய்கள் என்பதால் அவை கடிக்காது. அப்படியே பெரிய நாய்கள் என்றாலும் அவையும் ஒரு வயசு அல்லது இரண்டு வயசுக் குட்டியாகத்தான் இருக்கும்.

இவங்களை தத்து எடுக்க விரும்பினால் அப்படியே வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். செஷன் ஆரம்பிக்கும் போது, முதலில் செல்லப்பிராணிகளுக்கு என்ன என்று புரியாது. அதன் பிறகு அவர்கள் அந்த சூழலுக்கு தங்களை தயார் செய்து கொள்வார்கள். இந்த மாதிரி விடப்பட்ட குட்டி நாய்கள் சென்னையில் உள்ள ப்ளூகிராஸ் காப்பகத்தில் மட்டுமே 400 எண்ணிக்கையில் உள்ளனர். அந்த வயசில் குழந்தைகளுக்கு மட்டுமில்லை நாய்களுக்கும் தனிப்பட்ட கவனம் தேவை. ஆனால் இவர்களோ சுற்றி 400 நாய்களுடன் வளர்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவங்களுக்கும் மனஅழுத்தம், பயம் ஏற்படும். ஒரு சிலர் ஹைபர்ஆக்டிவ்வா இருப்பாங்க. அவர்கள் இங்கு வந்து அன்பை பெறும் போது, அவர்களின் நடத்தையில் பெரிய மாற்றத்தை காண்பதாக காப்பகத்தில் உள்ளவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

பாகா செயல்பட முக்கிய நோக்கம் இவர்களுக்கு அன்பான பெற்றோர்கள் தேவை. தத்து எடுப்பதை அதிகரிக்கணும். இந்த காப்பகத்திற்கு உதவி செய்யணும். இந்த மூன்று காரணம்தான் பாகா ஆரம்பிக்க. அதே சமயம் நாங்க யாரையும் தத்து எடுக்கணும்னு வற்புறுத்துவதில்லை. விரும்பினால், அவர்களுக்கு பாசமான பெற்றோர்களாக இருந்தால் மட்டுமே தத்து கொடுக்கிறோம். எப்படி ஒரு குழந்தையை தத்து எடுக்க குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளதோ, அதேபோல் நாங்களும் பின்பற்றுகிறோம். தத்து எடுப்பவர்களுடன் நேர்காணல் நடத்துவோம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நம்பிக்கை வந்த பிறகு தத்துக் கொடுப்போம். மாதம் ஒரு முறை நேரில் சென்று நாய்களின் நிலையினை அறிவோம். 3 வருஷம் இவர்களை கண்காணிப்போம். இந்த 3 வருடத்தில் இவர்கள் வீட்டில் ஒரு உறுப்பினராக மாறிடுவாங்க. நாமே போய் கேட்டாலும் தரமாட்டாங்க.

‘‘நாங்க யோகா மாஸ்டர் கிடையாது. அதற்கென யோகா பயிற்சியாளர்களை நியமிப்போம். மற்றபடி இடம், நாய்குட்டிகளை பத்திரமாக கொண்டு வருவது. அவர்களை இரண்டு வாரம் முன்பே தனிமைப்படுத்தப்பட்டு, டீவார்மிங் மற்றும் ஊசிகள் எல்லாம் போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்த பிறகு தான் அவர்கள் பாகாவிற்கு வருவாங்க. சிலருக்கு செல்லப்பிராணிகளை வளர்க்க பிடிக்கும். ஆனால் சூழ்நிலை சரியாக இருக்காது. அவர்களில் பெரும்பாலானோர் இதில் கலந்து கொள்ள வருகிறார்கள்’’ என்றவர் சென்னை மட்டுமில்லாமல் பெங்களூர், ஐதராபாத், மும்பை, கேரளா, கோவை போன்ற இடங்களிலும் பாகாவினை நடத்தி வருகிறார்.

‘‘நாங்க மூவருமே கார்ப்பரேட் துறையில் வேலை பார்க்கிறோம். மூவராலும் ஒரே நேரத்தில் எல்லா ஊர்களுக்கும் பயணிக்க முடியாது. அதற்கான தொண்டர்களை அந்தந்த ஊர்களில் நியமிக்கும் எண்ணம் உள்ளது. சனி, ஞாயிறுகளில் காலை மாலை என இரண்டு செஷன் நடக்கும். கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கான செஷனை தேர்வு செய்யலாம். நாய்குட்டிகள் மட்டுமில்லாமல் பூனைக்குட்டிகளையும் கொண்டு வருகிறோம்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளும் பாகாவில் இணையலாம். தற்போது செல்லப்பிராணிகளை வர்சுவல் முறையில் தத்து எடுக்கலாம். அதாவது வீட்டில் வளர்க்க முடியாத போது, இது போன்ற காப்பகத்தில் இருக்கும் நாய்குட்டிகளை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையானதை கொடுக்கலாம். நாங்க மூவரும் ப்யூட்டி என்ற குதிரையை அப்படித்தான் தத்து எடுத்திருக்கிறோம். காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தாலும், அதற்கு அத்தியாவசிய தேவையான உணவு, மருத்துவ செலவினை நாங்க மூவரும் பகிர்ந்து அளித்து வருகிறோம். தமிழகம் மட்டுமில்லாமல் வட மாநிலத்திலும் பாகாவினை கொண்டு செல்ல வேண்டும். இதுதான் எங்களின் விருப்பம்’’ என்றார் சுப.

தொகுப்பு: ஷம்ரிதி

The post செல்லப்பிராணிகளுடன் யோகா செய்யலாமே! appeared first on Dinakaran.

Related Stories: