சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர் நிலத்தை பேச்சுவார்த்தை மூலம் ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது. தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தக துறை செயலாளர் அருண்ராய் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நிலத்தின் விலை, வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, அருகில் உள்ள ரயில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, சர்வதேச பசுமை விமான நிலையத்தை உருவாக்கும் இடமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
20 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தவும், 1,972.17 ஏக்கர் அரசு நிலத்தை டிட்கோவுக்கு ஒப்படைக்கவும் அரசுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் முன்மொழிவை அனுப்பினார். அதில் 1,085.62 ஏக்கர் நிலம் நஞ்செய் நிலமாக உள்ளன. இவற்றையும் ஆர்ஜிதம் செய்வதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மிகவும் அதிக அளவில் நில ஆர்ஜிதம் நடைபெறுவதால், கூடுதல் பணியாளர்களையும், சிறப்பு அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும், வாடகை வாகன வசதிகள் செய்து தர வேண்டும் என்று அரசுக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.
மேலும் இதற்கு ஒரு ஆண்டுக்கான செலவாக ரூ.19.25 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து, அவர் கேட்டுக் கொண்டபடி 2 ஆண்டுகளுக்கு தேவையான 326 தற்காலிக சிறப்பு பணியிடங்களுக்கான அனுமதியையும், ரூ.19.25 கோடி நிதியை அனுமதித்தும் அரசு உத்தரவிடுகிறது. அதுபோல, 5,746.18 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில்களுக்கான நில ஆர்ஜித சட்டத்தின்படியோ அல்லது தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலமாகவோ ஆர்ஜிதம் செய்வதற்கான அனுமதியை அளித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பரந்தூர் விமான நிலையத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் 5,746 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.