- சென்னை
- துணை தலைமை உதவி செயலாள
- ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விளையாட்டு அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- துணை
சென்னை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக அவர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழத்துகள் வந்து குவிந்து வருகிறது. தேசிய தலைவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கட்சி நிர்வாகிகள் பலரும் சென்னைக்கு நேரடியாக வந்து உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை பயணத்தை தவிர்க்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
எனினும், முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கட்சிப் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் திமுக உடன்பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.