×
Saravana Stores

அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய இபிஎஸ் மனுவை நிராகரிக்க கோரி தயாநிதிமாறன் எம்.பி. புதிய மனு: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது என்றும், அந்த மனுவை நிராகரிக்க கோரியும் சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளார். தனது தொகுதி நிதியில் 95 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளேன் என்று தெரிவித்ததுடன் தொகுதி நிதி குறித்த பட்டியலையும் வெளியிட்டிருந்தார். இந்த மனு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எம்பி., எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தயாநிதிமாறன் சார்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜராகி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதிய சட்டத்தின்படி (பிஎன்எஸ்) இந்த வழக்கை விசாரிக்க முடியாது. பழைய சட்டத்தின் படி (இந்திய தண்டனை சட்டம்) இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். பழைய சட்டத்தின்படி சாட்சி விசாரணை தொடங்க உள்ள நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இதை ஏற்கக் கூடாது. இதை நிராகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமி சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய இபிஎஸ் மனுவை நிராகரிக்க கோரி தயாநிதிமாறன் எம்.பி. புதிய மனு: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Dayanithamaran ,EPS ,CHENNAI ,Dayanithimaran ,Edappadi Palaniswami ,Lok Sabha election ,Dinakaran ,
× RELATED நவ.5, 6ம் தேதி கோவையில் கள ஆய்வு அவதூறு...