×

மக்கள் பாதுகாப்பாக வாழ அமலாக்கத்துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே வேண்டுகோள்

புதுடெல்லி: அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே தெரிவித்தார். குருகிராமில் உள்ள எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் குழுமத்தின் இயக்குநர்களான பசந்த் மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோர் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்ட வானளாவிய அதிகாரம் குறித்து மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த நாட்டில் அமலாக்கத்துறைக்கு இப்போது கடுமையான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த அதிகாரங்களை தனிநபர் சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்தவிவகாரத்தில் கைது எப்படி செய்யப்பட்டது என்று பாருங்கள். அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்தாலும் கைது என்பது அவர்களது உரிமைகளை மீறுவதாகும். இதுபோன்ற அதிகாரத்தை தடுத்து நிறுத்த நிச்சயமாக இந்த நீதிமன்றத்தால் முடியும். இந்த அதிகாரங்கள் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

The post மக்கள் பாதுகாப்பாக வாழ அமலாக்கத்துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Senior ,Harish Salve ,Supreme Court ,New Delhi ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...