×

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

Karnataka, yedurappa, Kumaraswamy* மக்களிடம் தெரிவிக்க அமைச்சர்கள் வலியுறுத்தல்

பெங்களூரு : ரூ 100 கோடிக்கும் அதிக மதிப்பிலான நிலத்தை குமாரசாமிக்கு விடுவிப்பதற்காக எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு? என்பதை வெளிப்படையாக கர்நாடக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ்குண்டுராவ் வலியுறுத்தினார். பெங்களூரு குயின்ஸ் சாலையிலுள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தினேஷ்குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா, சந்தோஷ்லாட் நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது நிருபர்களிடம் அமைச்சர் தினேஷ்குண்டுராவ் கூறியதாவது: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரமற்ற புகார்களை கூறிவருகிறார்.

அதே நேரம் பெங்களூரு கங்கேனஹள்ளி லே அவுட்டில் நிலத்திற்கு தொடர்பில்லாத நபரின் பெயரில் 1.11 ஏக்கர் நிலம் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலத்தின் உரிமையாளர்கள் 21 பேரிடம் இருந்து ஒன்றிய அமைச்சர் குமாரசாமியின் அத்தையான விமலா (அனிதா குமாரசாமி தாய்) உரிமை பெற்றுள்ளார். அதே நேரம் அந்த நிலம் பிடிஏவின் சார்பில் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட அனைத்தும் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதே நிலத்தை குமாரசாமியின் உறவினர் சென்னப்பா பெயரில் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்த போது விடுவித்துள்ளார். இந்த வழக்கு லோக் ஆயுக்தா விசாரணையில் தற்போது இருக்கிறது.

இதற்கிடையே எடியூரப்பா, இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த போது நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்த நிலம் சார்ந்த நடவடிக்கைகள் 1976ல் தொடங்கி 1988ல் முழுமை அடைந்துவிட்டது. கூட்டணி ஆட்சியின் போது அதே நிலத்தை விடுவிக்கவேண்டும் என அதற்கான ஆவணத்தின் மீது குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாலும் அப்போது முதன்மை செயலாளராக பதவி வகித்த ராமலிங்கம், சட்டத்தின்படி இதற்கு வழி இல்லை என தெளிவுப்படுத்தினார். அதிகாரிகள், இவ்விதம் விளக்கம் அளித்தாலும் குமாரசாமி, மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆவணத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி முறிந்த நிலையில் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்ற பிறகும் குமாரசாமி, இதே நிலத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியில் எடியூரப்பா இருந்த போது சட்டத்திற்கு புறம்பான வகையில் 1.11 ஏக்கர் நிலத்தை விடுவித்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா மற்றும் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி ஆகியோரின் பரிந்துரைகள், கையெழுத்துகள் ஆவணத்தின் மீது இருக்கின்றன. எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகிய இரண்டு பேரும் தாங்கள் செய்ததை தவறு என ஒப்புக்கொள்கிறார்களா? அல்லது சுய நினைவு இன்றி கையெழுத்திட்டோம் என கூறவிரும்புகிறார்களா? என்பதை கர்நாடக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்பிலான 1.11 ஏக்கர் நிலம் குமாரசாமிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இதில் எத்தனை சதவீதம் கமிஷன் வழங்கப்பட்டது? எடியூரப்பா மற்றும் குமாரசாமி இடையே என்ன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது? நிலத்திற்கு சிறிதும் தொடர்பு இல்லாத ராஜசேகரய்யாவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இது ஏன்? என்பதற்கு குமாரசாமி மற்றும் எடியூரப்பா விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ரமேஷ்பாபு, காங்கிரஸ் பொது செயலாளர்கள் சத்ய நாராயண், அப்துல்வாஜித் ஆகியோர் உடனிருந்தனர்.

 

லோக் ஆயுக்தா விரைவான விசாரணை

அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறுகையில், பெங்களூரு கங்கேனஹள்ளி லே அவுட்டில் 1976ல் 1.11 ஏக்கர் நிலம் பிடிஏ கைப்பற்றி அதற்கான நிவாரண தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் 1988ல் முடித்துவிட்டது. அந்நிலம் அரசுக்கு சொந்தமான நிலையில் குமாரசாமி மற்றும் எடியூரப்பா அதை பினாமியான ராஜசேகரய்யாவுக்கு விடுத்து மோசடி செய்துள்ளது. அத்தை பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்ட 20 நாளில் மருமகனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா போலீசார் விரைவாக இந்த வழக்கை விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?

அமைச்சர் சந்தோஷ்லாட் கூறுகையில்,எடியூரப்பா, குமாரசாமிக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை தாமதம் ஆகியுள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்கிறோம். ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் தவறுக்கு ஆதாரம் இருக்கிறது. மாநிலத்தில் தற்போது உங்களின் (பாஜவின்) ஆதரவாளராக ஆளுநர் இருப்பதால் விசாரணைக்கு உடனடியாக அனுமதி அளிக்கவேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம். பாஜ மற்றும் மஜதவின் ஊழல்களில் ஒன்று வெளியே வந்துள்ளது. இனிமேல் தொடர்ந்து வெளியே கொண்டு வரப்படும் என்றார்.

The post ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு? appeared first on Dinakaran.

Tags : Edyurappa ,Kumarasamy ,MINISTERS ,BANGALORE ,EDIURAPPA ,KUMARASAMI ,Minister ,Dinesh Kundurao ,Karnataka ,Dinakaran ,
× RELATED குமாரசாமிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு:...