பயணிகள் ரயில் இன்ஜின் திடீர் பழுது புறநகர் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை: ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவிலிருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் ரயில், பொன்னேரி அருகே சென்றபோது, இன்ஜின் திடீரென பழுது ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை பயணிகள் ரயில், பயணிகளுடன் புறப்பட்டது. பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை அருகே வந்தபோது, இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டதால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய புறநகர் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, பழுதான இன்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த இன்ஜினை பொன்னேரி ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். அதற்கு பிறகு பொன்னேரி ரயில் நிலையத்தில் மாற்றுப்பாதையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஒரு மணி கால தாமதத்திற்கு பிறகு இயக்கப்பட்டன. இதையடுத்து, இன்ஜின் பழுது சரிசெய்யப்பட்டு, பயணிகள் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

நேற்று முன்தினம் பொன்னேரி அருகே மின்சார பராமரிப்பு ரயில் தடம் புரண்டதன் காரணமாக புறநகர் ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னை- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் விரைவு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. தொடர் சம்பவங்களால் ரயில் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

The post பயணிகள் ரயில் இன்ஜின் திடீர் பழுது புறநகர் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: