போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு காசாவில் இருந்து 3 நாட்களில் 22,000 பாலஸ்தீனர்கள் வெளியேறினர்: ஐ.நா. தகவல்

ஜெருசலேம்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு காசாவில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 22,000 பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவிற்கு வெளியேறியதாக ஐநா தெரிவித்துள்ளது. காசாவை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 242 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இதனால் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது ஒரு மாதத்தை கடந்து நீடிக்கிறது. இதில் 4,200 குழந்தைகள் உள்பட 10,300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் ஆதிக்கம் நிறைந்த காசாவை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் மக்கள் நெருக்கம் மிகுந்ததும், அகதிகள் முகாம் அமைந்துள்ள காசாவில் ஹமாஸ் படையினரை கூண்டோடு அழிக்கும் நோக்கத்தில் வான் மற்றும் தரைவழி தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

வடக்கு காசாவில் உள்ள மக்கள் ஏற்கனவே வெளியேறும்படி கெடு விதித்திருந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது அவர்கள் வெளியேறாவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து, 22,000 பாலஸ்தீனர்கள் அங்கிருந்து கடந்த மூன்று நாட்களில் வெளியேறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.இது குறித்து மனிதாபிமான ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஐநா அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘காசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் 15,000 பேர், திங்கள்கிழமை 5,000 பேர் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,000 பேர் என கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 22,000 பாலஸ்தீனர்கள் போர் நடக்கும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவத்தினரால் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் போர்க்கால பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.

* 50,000 கர்ப்பிணிகள் பாதிப்பு

ஐநா குழந்தை பிறப்பு மற்றும் பாலின சுகாதாரத்துக்கான தலைவர் டாக்டர் நடாலியா செய்தியாளர்கள் சந்திப்பில், “காசாவில் 50,000 கர்ப்பிணி பெண்கள் தாய்மைக்கான போதிய மருந்துகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். நாளொன்றுக்கு 180 கர்ப்பிணிகள் குழந்தை பெறுகின்றனர். போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 5,500 குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவமனைகள் செயல்படுவற்கு தேவையான எரிபொருள், சுத்தமான குடிநீர், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று கூறினார்.

The post போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு காசாவில் இருந்து 3 நாட்களில் 22,000 பாலஸ்தீனர்கள் வெளியேறினர்: ஐ.நா. தகவல் appeared first on Dinakaran.

Related Stories: