×

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு: இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ‘தோஷகானா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

புதிய காபந்து அரசில் நிர்வாகத்தை மேற்கொள்வது யார் என்பதை ஷெபாஸ் ஷரீப் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணைந்து முடிவு செய்ய உள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளது.

தற்போதைய நிலையின் படி இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனினும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டிய பணிகள் இருப்பதால் தேர்தல் மேலும் பல மாதங்கள் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தானில் தேர்தல் நடத்துவதற்குக் கால தாமதம் ஏற்பட்டால் பொதுமக்களின் கோபம் இன்னும் அதிகரிக்கும் எனவும் இதனால் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

The post பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு: இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pakistan parliament ,Imran Khan ,ISLAMABAD ,Pakistan ,Dinakaran ,
× RELATED 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின்...