வரலாற்றில் முதல்முறை… பாகிஸ்தானில் ரூ.300-ஐ கடந்த பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கவலை..!!

கராச்சி: பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ.300-ஐ தாண்டியுள்ளது. ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.15-க்கு உயர்த்தப்பட்டதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.14.91 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தியது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை முதல் முறையாக ரூ.300-ஐ தாண்டியுள்ளது. ஏற்கெனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மாற்று விகித மாறுபாடுகள் காரணமாக, தற்போதுள்ள பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வோர் விலையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்மையில் கடுமையான மின்கட்டண உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். முல்தான், லாகூர் மற்றும் கராச்சி உட்பட பல இடங்களில் நடந்த போராட்டங்களில், பொதுமக்கள் தங்கள் மின்கட்டண ரசீதுகளை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்படியான நெருக்கடி சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது பாகிஸ்தான் மக்களுக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post வரலாற்றில் முதல்முறை… பாகிஸ்தானில் ரூ.300-ஐ கடந்த பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கவலை..!! appeared first on Dinakaran.

Related Stories: