அதிமுகவை விட ஓபிஎஸ்சுக்கு 3 மடங்கு அதிக ஓட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 3.41 லட்சத்துக்கும் அதிக வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில், சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். ஓபிஎஸ் களமிறங்கியதால் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா, மாஜி அமைச்சர் மணிகண்டன் உட்பட முக்கிய நிர்வாகிகள் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொகுதிக்கு தொடர்பில்லாத விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். பாஜ கூட்டணியில் இருந்தாலும், தனது தொகுதியை தவிர, வேறெந்த தொகுதியிலும் ஓபிஎஸ் பிரசாரம் செய்யவில்லை. இது கூட்டணியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியபோதிலும் அவர் அதனை பெரியதாக பொருட்படுத்தவில்லை. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 5,09,664 பெற்று அமோக வெற்றி பெற்றார்.

ஓபிஎஸ் சுமார் 3,42,882 லட்சம் வாக்குகள் பெற்று 2வது இடம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780 குறைவாக வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தனர். அதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த பல வழக்குகளில் ஓபிஎஸ்சுக்கு எதிரான தீர்ப்பே கிடைத்தது. தேர்தலில் தோல்வியை தழுவினாலும், அதிமுகவை தாண்டி 3 மடங்கு ஓட்டுகள் பெற்றிருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தில் உள்ளார். மீண்டும் எடப்பாடிக்கு எதிரான அவரது தர்ம யுத்தங்கள் தொடரலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5 பன்னீர்செல்வங்களை களமிறக்கியும் ‘நோ யூஸ்’ ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டதை தொடர்ந்து, அவருக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்கள் சுயேச்சையாக களமிறக்கப்பட்டனர். இது அதிமுகவினரின் சதி. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்றே களமிறக்கியதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். 5 பன்னீர்செல்வங்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு :
ஒ.பன்னீர்செல்வம் – 2,970
ஒ.பன்னீர்செல்வம் – 1,917
ஒ.பன்னீர்செல்வம் – 1,375
ஒ.பன்னீர்செல்வம் – 570
எம்.பன்னீர்செல்வம் – 2,389
மேற்கண்ட 5 பன்னீர்செல்வங்களும் சேர்த்து மொத்தம் 9,221 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுகவை விட ஓபிஎஸ்சுக்கு 3 மடங்கு அதிக ஓட்டு appeared first on Dinakaran.

Related Stories: