×

அரும்பாக்கத்தில் 40 வருடங்களாக உள்ள விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்


அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் ஜானகி காலனி தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் கோயில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் வசித்துவரும் நபர் ஒருவர், தினமும் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த நாய்கள் அனைத்தும் கோயிலுக்குள் சென்று சிறுநீர், மலம் கழித்து அசிங்கப்படுத்தியுள்ளது. இதனால் கோயில் நிர்வாகம் சார்பில், தெரு நாய்கள் கோயிலுக்குள் வராதபடி விரட்டியடித்துள்ளனர். இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலை இடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் கோயிலை இடிக்க வந்தபோது 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து விநாயகர் கோயிலை இடிக்க கூடாது என்று கடும் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் துணை ஆணையர் சினேகா பிரியா வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், ‘’40 வருடமாக உள்ள விநாயகர் கோயிலை இடிக்க உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு எதுவும் கிடையாது. தெரு நாய்கள் கோயிலுக்குள் வருவதால் துர்நாற்றம் வீசியது. இதனால் நாய்களை விரட்டினோம். இதற்காக எதிர் வீட்டுக்காரர் கோயிலை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த கோயிலை இடித்தால் எங்களுக்கு மன வேதனை ஏற்படும்’’ என்றனர்.

இதையடுத்து போலீஸ் துணை ஆணையர், சென்னை மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இன்னும் ஒரு மாதம் அவகாசம் கொடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கோயிலை இடிக்காமல் சென்றுவிட்டனர்.

The post அரும்பாக்கத்தில் 40 வருடங்களாக உள்ள விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,temple ,Arumbaka ,Annanagar ,Vinayagar Temple ,Janaki Colony Street ,Chennai Arumbakam ,
× RELATED விநாயகரின் முதலாம் படைவீடான செல்வகணபதி