×

விநாயகரின் முதலாம் படைவீடான செல்வகணபதி

‘‘கணபதியை தொழுதால் காரியம் கைகூடும்’’ என்பது பக்தர்களின் திடநம்பிக்கையாகும். அதனாலோ என்னவோ, அண்ணாமலையார் திருக்கோயிலில் காணும் திசையெங்கும் காட்சியளிக்கிறார் கணபதி.

கோபுர கணபதி, வன்னிமர விநாயகர், கஜசம்கார விநாயகர், கணேசர், யானை திரைகொண்ட விநாயகர், சிவகங்கை விநாயகர், ஸ்தல விநாயகர், சம்மந்த விநாயகர், விஜயராகவ கணபதி, செந்தூர விநாயகர் என எண்ணற்ற திருப்பெயர்களில் அண்ணாமலையார் கோயிலில் அருள்தருகிறார்.

அண்ணாமலையார் திருக்கோயில் விழாக்கள் அனைத்தும், கொடிமரத்துக்கு வலது திசையில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் தொடங்குவது மரபு. சம்மந்த விநாயகரை தரிசித்த பிறகே, கருவறை தரிசனம் செய்வது சிறப்பு.

கிளி கோபுரத்தின் வலதுபுறம் அருள் தருகிறார் ஆனை திரை கொண்ட வினாயகர். பலமுறை போரிட்டும் தோல்வியைத் தழுவிய மன்னன் ஒருவன், போரில் வென்றால் ஆயிரம் யானைகளை திரையாகக் கொடுக்கிறேன் என விநாயகரிடம் வேண்டினான். அதன்படியே வெற்றியும் பெற்று வேண்டுதலை நிறைவேற்றினான். எனவே, யானையைத் திரையாகப் பெற்றதை அடையாளப்படுத்தவே இத்திருநாமம்.

சுவாமி சந்நதியின் வலதுபுறம் கோயில் கொடி மரம் அருகே அமைந்துள்ள சம்மந்த விநாயகரும், அம்மன் சந்நதியின் வலப்புறம் அமைந்துள்ள விஜயராகவ கணபதியும் செந்நிறமாகக் காட்சி தருகின்றனர். சம்மந்த விநாயகரை செந்தூர விநாயகர் என அழைக்கின்றனர்.

ராஜகோபுரத்தின் இடது தூணில் எழுந்தருளியிருக்கும் செல்வகணபதி விசேஷமானவர். முருகப் பெருமானுக்கு அறுபடைவீடுகள் அமைந்திருப்பதைப் போல, விநாயகரின் அறுபடை வீடுகளில் முதலாம் வீடு ராஜகோபுரத்து செல்வகணபதி என்பது பலரும் அறியாத தகவல்.

விவேக சிந்தாமணியில் அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் செல்வகணபதியின் பெருமையும், புகழும் முதல் பாடலாக அமைந்துள்ளது.

அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் – நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்கணபதியைக் கைதொழுதக் கால்.

காலத்தால் அழியாத இப்பாடல் வரிகள் மூலம், ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் செல்வகணபதியின் சிறப்பை உணரலாம். விநாயகரின் இரண்டாம் படை வீடு, விருதாச்சலத்தில் அமைந்திருக்கிறது. அங்குள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் எனும் திருப்பெயர். திருக்கடையூரில் மூன்றாவது படைவீடு அமைந்திருக்கிறது. ஆயுளை அருளித்தரும் திருக்கடையூர் கணபதிக்கு கள்ள வாரணப் பிள்ளையார் எனும் பெயர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தி விநாயகர் நான்காம் படைவீடு. ஐந்தாம் படைவீடான பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகரை தரிசிக்கலாம். ஆறாம் படைவீடாக திருநாரையூரில் பொள்ளாப்பிள்ளையார் அருள்கிறார்.

The post விநாயகரின் முதலாம் படைவீடான செல்வகணபதி appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Selvaganapathi ,Ganapati ,Ganpati ,Annamalaiyar Temple ,Kopura Ganpati ,Vannimara Vinayagar ,Kazzamkara Vinayagar ,Ganesar ,Elephant Dragonda Vinayagar ,Sivaganga Vinayagar ,Stala Vinayagar ,Sammantha ,Selvaganapati ,Dinakaran ,
× RELATED திருக்குளக்கரை விநாயகர்