1. பயன்படுத்தப்பட்ட விமானங்கள்
இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் அதிநவீன போர் விமானங்களைப் பயன்படுத்தியது. இந்த தாக்குதலில் ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பிரான்ஸிடமிருந்து 2016ல் வாங்கியவை. மிக உயர் துல்லியமான தாக்குதல் திறன்களைக் கொண்ட இந்த விமானம், எதிரியின் பகுதிகளில் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை ஆகும். ஆபரேஷன் சிந்தூரில் 7 நகரங்களில் உள்ள 9 முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த ரபேல் விமானங்கள் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டன. இவை எஸ்சிஏஎல்பி ஏவுகணைகள் மற்றும் ஏஏஎஸ்எம் ஹேமர் ஆயுதங்களை ஏந்தியிருந்தன. ரபேல் விமானங்கள் அதிநவீன ரேடார் அமைப்புகள், உயர் துல்லியமான இலக்கு கண்டறிதல், நீண்ட தூரத்தில் தாக்குதல் நடத்தும் திறன் ஆகியவற்றைக் கொண்டவை. இவை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கு ஏற்றவையாகும். இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரபேல் விமானங்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் 4 முதல் 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. ரபேல் மட்டுமின்றி சுகோய் -30 என்ற மற்றொரு முதன்மைப் போர் விமானமும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன அல்லது உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவை பிரமோஸ் ஏவுகணைகளை ஏந்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. கடந்த 2019 பாலகோட் தாக்குதலில் மிராஜ் 2000 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல, இந்த விமானங்கள் ஆபரேஷன் சிந்தூரில் துணைப் பங்கு வகித்திருக்கலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
2. பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள்
ஆபரேஷன் சிந்தூரில் உயர் துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையில் இந்தியா-ரஷ்யா இணைந்து உருவாக்கிய உலகின் வேகமான சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. இது 300-500 கி.மீ. தூரம் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைகள் ரபேல் மற்றும் சுகோய் விமானங்களில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம். அதேபோல் எஸ்சிஏஎல்பி க்ரூஸ் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன. பிரான்ஸ் தயாரித்த இந்த நீண்ட தூர (250-560 கி.மீ.) க்ரூஸ் ஏவுகணை, ரபேல் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணை பஹவல்பூர், முரிட்கே, முசாபராபாத் முகாம்களை அழிக்க பயன்படுத்தப்பட்டன.
3. பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்
பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான வெடிகுண்டான ஏஏஎஸ்எம் ஹேமர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஜிபிஎஸ் மற்றும் லேசர் வழிகாட்டல் அமைப்புகளைப் பயன்படுத்தி உயர் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டது. இவை 250 கி.கி. முதல் 1000 கி.கி. வரையிலான எடைகளில் கிடைக்கின்றன. தீவிரவாத முகாம்களின் உள்கட்டமைப்புகளை அழிக்க இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இவை ரஃபேல் விமானங்களில் பொருத்தப்பட்டு 24 துல்லியமான மிசைல் தாக்குதல்களை நடத்தின.
4. பிற ஆயுதங்கள்
கடந்த 2019 பாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட எஸ்பிஐசிஇ – 2000 என்ற வெடிகுண்டுகள் ஆபரேஷன் சிந்தூரில் மிராஜ் 2000 விமானங்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவை 70-100 கி.மீ. தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை. லேசர் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
5. பிற தொழில்நுட்பங்களின் பயன்பாடு
இந்தியாவின் ஆளில்லா நெட்ரா விமானங்கள் (யுஏவி) எதிரியின் இலக்கு கண்டறிதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனை டிஆர்டிஓ உருவாக்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் உயர் துல்லியமான இலக்கு தகவல்களை வழங்கின. இந்திய கடற்படையின் பி-8I போசிடான் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் தாக்குதலுக்கு உளவு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் பங்கேற்றன. மேலும் இந்திய ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பதிலடி பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. அதில் 155மிமீ போஃபோர்ஸ் பீரங்கிகள் மற்றும் பினாகா பல்குழல் ராக்கெட் ஏவிகள் பயன்படுத்தப்பட்டன என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
The post ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என்னென்ன?: பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.