குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மையப் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் வழியாக ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, காங்கேயம், கரூர், பெங்களூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரக்கு வாகனங்கள் இந்த வழியாக தன் செல்கிறது.
அதே போல் எதிர் மார்க்கத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, நகரத்திலிருந்து திருச்சி கரூர் மெயின் ரோட்டில் குளித்தலை நகரத்தை கடந்து தான் தினந்தோறும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் குளித்தலை சுற்று வட்டார பகுதியில் நகரபேருந்துகள், உள்ளூர் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் இவ்வழியாக தான் சென்று வருகிறது.
இந்நிலையில் குளித்தலை நகராட்சி பகுதியில் கழிவுநீர் வடிகால் தென்கரை வாய்க்கால் பகுதியில் இருந்து பஸ் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே கடந்து தனியார் ஓட்டல் வழியாக திருச்சி கரூர் மெயின் ரோடு குறுக்கே 20 மீட்டர் அகலத்திற்கு கழிவுநீர் செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழாயை கடந்து பள்ளிவாசல் தெரு, பெரியாண்டார் தெரு, பஜனைமடம், கடைவீதி, அமல ராகினி பள்ளி, தெப்பக்குளம் வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து விளை நிலத்தில் சென்றடைகிறது.
இந்நிலையில் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் செல்லும் நிலைமை உள்ளது. இந்த நிலையை கண்டறிந்த நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர் வாரும் பணியை மேற்கொண்டனர். இப்பொழுது தென்கரை வாய்க்கால் பகுதியில் இருந்து பள்ளிவாசல் வரை தூர் வாரும் பணி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருச்சி கரூர் மெயின் ரோட்டில் சாலையின் குறுக்கே குழாய் பதிக்கப்பட்டு இருப்பதால் பல ஆண்டுகளாக கல் மண் அடைத்துக் கொண்டு தண்ணீர் சாலையின் குறுக்கே செல்ல முடியாமல் இருந்து வருகிறது. அதனால் பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி சாலையின் குறுக்கே கழிவு நீர் வடிகால் எவ்வித இடையூறும் இன்றி செல்வதற்கு புதிய சிறிய பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குளித்தலை பஸ் நிலையம் அருகே சாலையின் குறுக்கே குழாய் அடைப்பு கழிவுநீர் செல்ல முடியாத நிலை appeared first on Dinakaran.