×

ஈரோட்டில் விதிமீறி இயங்கிய 2 சாய ஆலைகளுக்கு சீல்

ஈரோடு, நவ.6: ஈரோட்டில் தடை உத்தரவு மற்றும் விதிகளை மீறி செயல்பட்ட 2 சாய, சலவை தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் செயல்படும் சாய, சலவை ஆலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், காவிரி ஆற்றிலும், பாசன வாய்க்கால்களிலும் வெளியேற்றி வருகின்றனர். இதனால், காவிரி ஆறு முற்றிலும் மாசுபட்டு, குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் இதர நீர்நிலைகளை மாசுபடாமல் தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைத்தது.

மேலும், விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை வசூலிக்குமாறும் உத்தரவிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதிகாரிகள் தலைமையிலான பறக்கும் படை இணைந்து தொழிற்சாலைகள், நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அரசின் விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வைராபாளையம் பகுதியில் ஏற்கனவே விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு தனியார் சாய, சலவை தொழிற்சாலை, இரவு நேரத்தில் மாற்று மின் இணைப்பை பயன்படுத்தி இயக்கி வருவதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, தடையை மீறி, மாற்று மின் இணைப்பினை பெற்று தொழிற்சாலையை இயக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி பனங்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை, திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி ஆலையின் திடக்கழிவினை இரவு நேரத்தில் லாரி மூலமாக எடுத்துச்சென்று கரூர் மாவட்டம், தென்னிலை கிராமம் அருகில் கொட்டப்பட்டது.

பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், திடக்கழிவினை சாலையோரத்தில் விதிகளுக்கு புறம்பாக கொட்டிய லாரி மற்றும் ஓட்டுநர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தடையை மீறியும், விதிகளை மீறியும் செயல்பட்ட இந்த 2 தொழிற்சாலைகளையும் ஈரோடு கலெக்டர் கதிரவன், மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 2 தொழிற்சாலைகளும் நிரந்தரமாக மூடப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறுகையில்,‘ஈரோடு மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Erode ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு