ஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது

ஓசூர், மார்ச் 20: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வரும் கர்நாடக மாநில பஸ்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்களால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். ஓசூர் நகரம் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லை பகுதியில் உள்ளது. இந்த நகரத்திற்கு கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 45 பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால், கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியிடங்களுக்கு சென்றுவர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து ஓசூர் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக 20 பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. கர்நாடக மாநிலத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தியேட்டர்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவை எதுவும் நடக்கவில்லை.

அதேபோல், தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 900க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓசூர் வழியாக கர்நாடகத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா பாதிப்பால் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளது. ஓசூர் மாநகர பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகள் பஸ்சில் வந்து செல்வர். தற்போது, அவர்களது வரத்தும் குறைந்துள்ளது. கர்நாடகாவில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் அவரவர் வீட்டிலேயே இருந்து பணிகளை மேற்கொண்டு வருவதால், மாநில எல்லையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

Related Stories:

More
>