×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் ஆய்வு

சேலம், மார்ச் 19:  சேலம் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைகளை, கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சேலம் மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஜங்சன் ரயில் நிலையங்களில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும், பஸ், ரயில் பயணிகளிடமும் விநியோகம் செய்தார். பின்னர், பஸ் ஸ்டாண்டில் உள்ள சில பஸ்களில் ஏறி, கிருமிநாசினி தெளிக்கப்படுவதை பார்வையிட்டார். தொடர்ந்து, கலெக்டர் ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்,  சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள  32 கிளைகளின் கீழ், 2,041 பஸ்களும், பிற மாநிலங்களுக்கு 255 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இவற்றில்16 ஏசி பஸ்களும் அடங்கும்.இதுமட்டுமன்றி, சேலம் மாவட்டத்தில் 410 புறநகர் மற்றும் 86 மாநகர் தனியார் பஸ்கள்  இயக்கப்படுகின்றன. அனைத்து அரசு பஸ்களுக்கும் பணிமனையில் இருந்து வெளியில் வரும்போது, உட்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் அனைத்து பஸ்களுக்கும் ஒவ்வொரு நடைக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. குளிர்சாதன பஸ்களில் திரைச் சீலைகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருகைதரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய அகச்சிவப்பு கதிர் தெர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அப்பயணிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி தேவையான சிகிச்சைகளை பெறவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை இல்லை. முன்னெச்சரிக்கையாக, சேலம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள், மேட்டூர் அரசு மருத்துவமனையில் 5 படுக்கைகள் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகளிலும் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.  முகக்கவசம் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய அத்தியாவசியப் பொருள் என்பதால், சரியான விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தொழிலாளர்  துறையினர் பறிமுதல் செய்த முகக்கவசங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியையோ அல்லது தேவையற்ற பீதியையோ சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார். ஆய்வில், சேலம் ரயில்வே மண்டல முதுநிலை மேலாளர் (வணிகம்) ஹரிகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் ரவீந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

கலெக்டர் அலுவலகம்
வருவோருக்கு சோதனை
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்த பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலிலேயே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Railway Stations ,
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...