×

செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாலத்தின் திறப்பு விழாவுக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு

*தடுப்புகள் ஏற்படுத்தி போராட்டம்

*உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை : இந்தியா முழுவதும் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்கள் சீரமைத்தல் மற்றும் 1,500 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திங்கட்கிழமை காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பாலத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் துறையினரை செங்குறிச்சி கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு காருடன் சிறைபிடித்ததோடு சாலையின் குறுக்கே தடுப்புகளை கட்டி வாகனங்கள் வெளியே செல்ல முடியாத வகையில் மரங்களை கட்டி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில்வே துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மழைக்காலங்களில் செங்குறிச்சி பெரிய ஏரி நிரம்பி அதிலிருந்து தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் சுரங்க பாலம் கட்டப்பட்டுள்ளதால், ஏரி உபரிநீர் வெளியேற நடவடிக்கை எடுத்த பின்னரே இந்த சுரங்க பாலத்தின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என கூறி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மழைக்காலங்களில் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை தேங்காமல் வெளியேற்ற பெரிய அளவில் குழாய்கள் அமைத்து அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், சுரங்க பாலத்தை சுத்தப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இப்பாலத்தின் திறப்பு விழா நிகழ்வை செங்குறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புறக்கணித்து வீடுகளுக்கு சென்றனர்.

The post செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாலத்தின் திறப்பு விழாவுக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Sengurichi ,Ulundurpet Ulundurpet ,India ,Amrit Bharat ,Narendra ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்