×

போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டம் தடுத்து நிறுத்தம்

போச்சம்பள்ளி, மார்ச் 13:  போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால், 200க்கும் மேற்பட்ட காளைகளை போட்டியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப அழைத்துச் சென்றனர். போச்சம்பள்ளி அருகே அத்திகானூர் கிராமத்தில் பூனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று(12ம் தேதி) எருது விடும் விழா நடைபெறும் என நோட்டீஸ் அச்சிட்டப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனால், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகளுடன் நேற்று அத்திகானூரில் திரண்டனர். இதையடுத்து, காலை குறிப்பிட்ட நேரத்தில் எருதாட்டம் துவங்கியது.

சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் எருதாட்டத்தை காண்பதற்காக மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது, ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. 10 காளைகளை ஓடவிட்ட நிலையில், அங்கு மத்தூர் போலீசார் வந்து, எருதாட்டத்திற்கு உரிய அனுமதி பெறாமல் போட்டியை நடத்துவதாக கூறி தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். போட்டி நிறுத்தப்பட்டதால், போட்டியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 200க்கும் மேற்பட்ட காளைகளை ஏமாற்றத்துடன் திரும்ப அழைத்துச் சென்றனர்.

Tags : Pochampally ,
× RELATED உடல் அடக்கத்தை தடுத்தால் கடும்...