×

போச்சம்பள்ளியில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

போச்சம்பள்ளி, மார்ச் 6: போச்சம்பள்ளி பகுதியில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போச்சம்பள்ளியில் இருந்து திருவயலூர், முல்லை நகர், புளியம்பட்டி வரை சாலை செல்கிறது. இச்சாலையை குள்ளம்பட்டி, சந்தம்பட்டி, வலகவுண்டனூர் பகுதி கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் போச்சம்பள்ளி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல திருவயலூர் வழியாக வரவேண்டும். ஆனால் கடந்த 9 ஆண்டாக இந்த திருவயலூர் சாலை 2 கிமீ தூரம் வரை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

கற்கள் பெயர்ந்த தார் சாலையால் அவ்வழியாக செல்லும் பஸ், கார் மற்றும் இருசக்கதர வாகனங்கள், டிராக்கடர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைகின்றனர். மேலும் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர். மழை காலங்களில் அவ்வழியாக செல்ல முடியாமல் 4 கி.மீ. தூரம் சுற்றி மாற்று வழியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன் புளியம்பட்டி சாலையை 2 அடி அகலப்படுத்தி புதிய தார்சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் டென்டர் விடப்பட்டும் இன்று வரை தார் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. எனவே சிதிலமடைந்த புளியம்பட்டி தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Pochampally ,
× RELATED ‘எங்கு பார்த்தாலும் குண்டும்,...