×

கோமுகி அணையில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்

சின்னசேலம், மார்ச் 4: கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை 1963ல் தொடங்கி 1966ல் நீர்வடிபரப்பு 113 சதுர மைல் அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு சென்று அதன்மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கால்வாய் பாசனத்தின் மூலம் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின் போதும், கல்வராயன்மலையில் அதிக மழை பொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு பாசனத்துக்காக அக்டோபர் மாதம் திறந்து விடப்படுகிறது. அதாவது அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த கோமுகி அணையின் மூலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை கச்சிராயபாளையம், அதை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மூன்று போகம் நெல் அறுவடை செய்தனர். அந்தளவுக்கு கோமுகி அணை ஆழமாகவும், அகலமாகவும் அதிகளவில் நீரை தேக்கி வைக்கும் வகையில் இருந்தது. காலப்போக்கில் கோமுகி அணையின் மேற்கு, தெற்கு பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நீர்பிடிப்பு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் கோமுகி அணை கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிறது. அணை கட்டப்பட்டு 20 ஆண்டுகள் வரை அணையின் நீர்பிடிப்பு பகுதி போதிய ஆழத்துடன் நன்றாக இருந்தது. அதன்பிறகு தூர்வாரி பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளாத காரணத்தால், தற்போது புதர்போல செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அணைக்கு, மலையின் உயரத்தில் இருந்து நீர் வருவதால் மண், மணல், சிறுசிறு கற்கள் அடித்து வரப்பட்டு தற்போது மண்மேடாக உள்ளது. குறிப்பாக சுமார் 10 அடி ஆழத்துக்கு மண் மேடாகவே உள்ளது. இதனால் மழை காலத்தில் அணையில் போதிய அளவு நீரை சேமித்து வைக்க முடியாத நிலையில் வீணாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இணைந்து இந்த கோடையில் அணையின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Komukhi Dam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி...