×

கடன் பிரச்னையில் வீடு புகுந்து 50 பேர் கும்பல் தாக்குதல்

வாழப்பாடி, மார்ச் 3: வாழப்பாடியில், கடன் பிரச்னையில் வீடு புகுந்து 50 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி பேரூராட்சி 5வது வார்டு செல்லப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(50). இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வேல்முருகன் தனது நிலத்தை அடக்கு வைத்து சேசன்சாவடியைச் சேர்ந்த கணேசன்(40) என்பவரிடம் ₹5 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் கணேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் வேல்முருகன் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த அவரது மனைவியை சரமாரி தாக்கியுள்ளனர். இதனை தடுத்த உறவினர் மாதவன்(32) என்பவரையும் அடித்து, உதைத்துள்ளனர்.

மேலும், வீட்டை சூறையாடியதோடு, அங்குள்ள மாட்டுக் கொட்டகையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், தாங்கள் வந்த லாரி, இரண்டு மினி ஆட்டோ, ஒரு டிராவல்ஸ் வேன் மற்றும் இரண்டு கார்களில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அப்போது, ₹50 ஆயிரம் மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகளை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த 2 பேரும், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் லாரியை கைப்பற்றி விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : people gang attack home ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை