பல்லாவரம், பிப்.25: அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அனகாபுத்தூர் பஸ் நிலையம் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.பல்லாவரம் அடுத்தஅனகாபுத்தூர் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, தி.நகர், ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் இந்த பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து பஸ் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இந்த பஸ் நிலையம் குடிமகன்கள் கூடாரமாக மாறி வருகிறது. டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் குடிமகன்கள், இந்த பஸ் நிலையத்தில் வைத்து மது அருந்துகின்றனர்.
மேலும், போதை தலைக்கேறியதும் அங்குள்ள நடைபாதை மற்றும் இருக்கையில் சாய்ந்து விடுகின்றனர். இதனால், இங்கு வரும் பயணிகள் இருக்கையை பயன்படுத்த முடியாமல் அவதியடைகின்றனர். அதுமட்டுமின்றி, குடிமகன்கள் அங்கேயே வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் துர்நாற்றம் வீசி, கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அலட்சியப் போக்கில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, போதை ஆசாமிகளின் பிடியில் உள்ள அனகாபுத்தூர் பஸ் நிலையத்தை மீட்டு, அதனை சுத்தப்படுத்தி, முறையாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.