- நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம்
- குடவாஞ்சேரி
- நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம்...
கூடுவாஞ்சேரி, டிச.24: நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் நடத்திய செவிலியர்களை, குண்டு கட்டாக தூக்கி அவரவர் சொந்த ஊருக்கு பேருந்துகளில் போலீசார் அனுப்பி வைத்ததால் கூடுவாஞ்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தற்காலிக செவிலியர்கள் சென்னை சிவானந்தா சாலையில், கடந்த வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்ட செவிலியர்களை கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்து ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனிடையே, கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லாததால் நேற்று 6வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை கைது செய்வதற்காக, 10க்கும் மேற்பட்ட பேருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசார் நிறுத்தி வைத்தனர். மேலும், 500க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து கூடுவாஞ்சேரி, படப்பை, குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர். முன்னதாக அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை அதிகாலையிலேயே கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளே இருந்தபடி போராட்டம் நடத்தி வந்த செவிலியர்கள் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். இதனால், கூடுவாஞ்சேரியில் நேற்று மாலை பதற்றம் ஏற்பட்டது.
