காஞ்சிபுரம், டிச.23: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர். அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் என இருந்து வருவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு, தொடர்ந்து பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் குரல் கொடுத்து தங்களது எதிர்ப்பினை போராட்டங்கள் வாயிலாக முன்னெடுத்து வருகின்றன. இந்தநிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 10 பேர் திடீரென கட்சி கொடியுடன் வந்து, தமிழ்நாடு அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி, அங்கிருந்த அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், பேருந்து நிலையத்திலிருந்து சென்ற அரசு பேருந்துகளை விரட்டிச்சென்று மடக்கி, அப்பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்து, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
