- திருப்பூருர்
- பொங்கல் திருவிழா
- திருப்போரூர் தாலுகா
- திருப்போரூர் மாவட்ட விநியோக அலுவலகம்
- திருப்போரூர் டவுன் பஞ்சாயத்து
- கண்ணகப்பட்டை
- களவாக்கம்
திருப்போரூர்,டிச.25: திருப்போரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் கூட்டுறவு கடைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் தற்போது திருப்போரூரில் 2, கண்ணகப்பட்டில் 1, காலவாக்கத்தில் 1 என 4 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில்கொண்டு திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டு 3வது வார்டில் ஒரு கூட்டுறவு கடையும், 15வது வார்டில் படவட்டம்மன் கோயில் தெருவில் ஒரு கூட்டுறவு கடையும் உருவாக்கப்பட்டது. நிர்வாக நடைமுறைகள் முடிந்து கடந்த ஜூன் மாதம் அமைச்சரால் இரண்டு கூட்டுறவு கடைகளும் திறந்து வைக்கப்பட்டன. ஆனால், புதிய ஊழியர்கள் நியமனம், ரேஷன் பொருட்கள் சப்ளை ஆகியவற்றில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடைகள் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இந்த 2 கூட்டுறவு கடைகளும் பயன்பாட்டுக்கு வராததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
படவட்டமன் கோயில் தெருவில் சுமார் 450 குடும்ப அட்டைதாரர்களும், கண்ணகப்பட்டு 3வது வார்டு பகுதியில் 400 குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இவர்கள் தற்போதுவரை பழைய ரேஷன் கடையிலேயே பொருட்களை வாங்கி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். ஜனவரி மாதம் அரசால் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இவற்றை புதிய கடைகளின் மூலம்தான் வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் திருப்போரூர் பேரூராட்சியில் திறக்கப்பட்ட 2 கூட்டுறவு கடைகளுக்கும் ஊழியர்கள் நியமனம், பொருட்கள் சப்ளை ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
