×

புன்னப்பாக்கம் செங்கல் சூளையில் மீட்கப்பட்ட 247 கொத்தடிமைகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சென்னை: பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக்குழு செயலாளரும், நீதிபதியுமான சரஸ்வதி தலைமையில் ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஊத்துக்கோட்டை எஸ்.ஐ ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீரென புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் 109 பேரும், பெண்கள் 88 பேரும், சிறுவர்கள் 32, சிறுமிகள் 18 பேர் என 247 பேரை மீட்டனர். பின்னர் அவர்களிடம் திருவள்ளூர் ஆர்டிஓ வித்யா விசாரணை நடத்தி திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வம், ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், டிஎஸ்பி சந்திரதாசன் முன்னிலையில் மீட்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மீட்கப்பட்டவர்களில் பெரியவர்களுக்கு மட்டும் 190 பேருக்கு தலா ₹20 ஆயிரம் வீதம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...