×

கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை

தர்மபுரி, பிப்.12: பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் கவுரன். இவரது மனைவி செல்வி(39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கவுரன் மற்றும் செல்வி குடும்ப செலவுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளனர். மேலும், சுய உதவிக்குழு மூலமாகவும் கடன் வாங்கி இருந்ததால், கடனை திரும்ப தர முடியாமல் மனஉளைச்சலில் இருந்துள்ளனர். நேற்று முன்தினம், செல்வி வீட்டில் மூத்த மகன் சதீஷிடம் தான் விஷமருந்தி விட்டதாகவும், தம்பியை நன்கு பார்த்து கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு செல்வி உயிரிழந்தார். இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், கொளகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன்(40). இவரது மனைவி கவிதா(37). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தனது வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறிய சகாதேவன், குட்டூர் சென்று விட்டு திரும்பும்போது விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். அவ்வழியாக வந்த அவரது உறவினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சகாதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பவானி அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை