திருப்போரூர், ஜன.29: திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. இதையொட்டி பிரணவமலையில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் மலை மீது அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த பிரணவ மலைக் கோயிலில் சிதம்பர சுவாமிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதை மற்றும் தவம் செய்த குகை ஆகியவை இருப்பதால், பல ஊர்களில் இருந்தும் ஆராய்ச்சிக்காகவும், வணங்குவதற்கும் பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதை தொடர்ந்து இக்கோயிலில் காலை, மாலை பூஜைகள் நடத்த அர்ச்சகர் நியமிக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. பிரதோஷ தினத்தில் மட்டும் கோயில் முழுவதுமாக திறந்து வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் உச்சிவரை மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த மலைக்கோயிலில் குரங்குகள் அதிகமாக வசிப்பதால், இவை மின் கம்பங்களில் ஏறி மின் வயர்களை பிடித்து தொங்கி விளையாடுகின்றன. இதனால் மின்வயர்கள் வலுவிழந்து அடிக்கடி அறுந்து விடுகின்றன. இதனால் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் பிரணவமலைக்கு பின்புறம் எம்ஜிஆர் நகர், குமரன் நகர் ஆகிய குடியிருப்புகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மலைக்கோயில் அமைந்துள்ள பகுதி ஆளரவமற்று இருப்பதால் சிலர் இந்த மலைக்கோயில் வளாகத்தில் மது அருந்துதல், சூதாடுதல் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இங்கு கஞ்சா விற்பனையும் அமோகமாக நடக்கிறது. பல ஊர்களில் இருந்து வரும் பலரும் தங்களது பைக்குகளை நிறுத்தி விட்டு மலைக்கு மேலே சென்று, அங்கு விற்கப்படும் கஞ்சாவை வாங்கி செல்கின்றனர். மலைக்கோயில் வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் பாக்கட்களும், மது பாட்டில்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம், பிரணவ மலைக் கோயிலை நிர்வகிக்க நிரந்தர அர்ச்சகரை நியமித்து தினமும் கோயிலை திறந்து பூஜைகளை செய்து பராமரிக்க வேண்டும். சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை, மது அருந்துதல் ஆகியவற்றில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பாதுகாவலரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.