×

விவசாய வருமானத்தை இருமடங்காக்கும் விதை உற்பத்தி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

தா.பழூர், ஜன. 28: விவசாயிகள் தீவிர முறையில் பயிர் செய்தாலும் தானியமாக விற்பனை செய்வதால் அதற்கேற்ற லாபம் கிடைப்பதில்லை. சில தொழில்நுட்பங்களை கடைபிடித்து விதைகளாக உற்பத்தி செய்வதால் இருமடங்கு வருமானத்தை பெற முடியும். விதை உற்பத்திக்கு தரமான விதைகளை முதலில் தேர்வு செய்ய வேண்டும். விதையின் புறத்தூய்மை அதாவது கலப்பு விதைகளோ அல்லது வேறு விதைகளோ இருக்க கூடாது. மேலும் இனத்தூய்மையிலும் வேறுபாடு இருக்கக்கூடாது.

சான்றளிக்கப்பட்ட விதைகளை விதை உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றி பயிர் அற்றதாக இருக்க வேண்டும். விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இதன்மூலம் நோய் மற்றும் நூற்புழு தாக்குதலில் இருந்து விதைகளை பாதுகாக்க முடியும். மேலும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உரக்கலவையுடன் நுண்ணூட்ட சத்துகளும் கலந்து இடுதல் வேண்டும்.
நாப்தலின் அசிடிக் ஆஸிடை இலைவழி உரமாக தெளித்தலின் மூலம் பூக்கள் உதிர்வதை தடுத்து முதிர்ந்த விதைகளை பெற முடியும். காய்கள் முதிர்ந்த பிறகு 17 முதல் 18 சதவீத ஈரப்பதத்தை அறுவடை செய்ய வேண்டும். பிறகு விதைகளை சுத்தப்படுத்தி 8 முதல் 9 சதவீத ஈரப்பதத்தில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட விதையானது இருமடங்கு லாபத்தோடு விற்பனை செய்யலாம். இதற்கான விதை உற்பத்தி பயிற்சி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் நடக்கிறது.

பயிர் சாகுபடி செய்வதோடு மட்டுமில்லாமல் கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபடுவதால் மட்டுமே வருமானத்தை இருமடங்காக்க முடியும். இந்த நோக்கத்தோடு கறவை மாடு வளர்ப்பு பயிற்சியும் நடக்கிறது. இப்பயிற்சியில் நல்ல கறவை மாட்டு இனங்களை தேர்வு செய்வது மற்றும் அதிக பால் உற்பத்தி தரும் ரகங்களை தேர்வு செய்வது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். கறவை மாடுகளை வளர்ப்பதற்கு தீவன மேலாண்மை மிக மிக முக்கியம். அடர் தீவனம், உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் கலப்பு தீவனங்களை கலந்து ஒவ்வொரு வளர்ச்சிக்கு ஏற்றவாறு அளிக்க வேண்டும்.

சரியான நேரத்தில் தடுப்பூசிகளை போட வேண்டும். இவ்வாறு போடுவதால் கோமாரி மற்றும் அடைப்பான் நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். நோயால் பாலின் உற்பத்தி குறையும். சில நேரங்களில் இறப்பு கூட நேரிடலாம். இதை தடுப்பதற்கு தகுந்த சிகிச்கை முறைகளை அளிக்க வேண்டும். விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் கறவை மாடு வளர்ப்பு என இரண்டு பயிற்சிகள் இந்தாண்டு பிப்ரவரி மாதம் சோழமாதேவியில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் விவசாயிகள், கிரீடு வேளாண் அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Tags :
× RELATED ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று...