×

சூளகிரி அருகே 75 ஆண்டுகளாக பட்டா கேட்டு நடையாய் நடக்கும் டேம் எப்பளம் கிராம மக்கள்

சூளகிரி, ஜன.13: சூளகிரி அருகே டேம் எப்பளம் கிராமத்தில் 75 ஆண்டுகளாக வசித்து வருவோருக்கு பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுக்காவிற்குட்பட்ட உல்லட்டி ஊராட்சி டேம் எப்பளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 75 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரையிலும் வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்து வருவதால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கிருஷ்ணகிரியில் அணை கட்டும்போது அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் குடியேறி வசித்து வருகிறோம்.

1953ம் ஆண்டு முதல் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வீடு கட்டி குடும்பத்தோடு தங்கியுள்ளோம். 750க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். சூளகிரி பிடிஓ அலுவலகம் சார்பில் கிராமத்திற்கு தேவையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் வசதி மற்றும் தொடக்கப்பள்ளி என அனைத்து வ  வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 75 ஆண்டுகளாக பட்டா வழங்காத நிலை காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தும் கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்குடன் உள்ளனர். இதனால், வீடு கட்ட கடனுதவி உள்ளிட்ட எந்தவித பயன்களையும் பெற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Chulagiri ,
× RELATED தனியார் ஊழியரிடம் ₹19.30 லட்சம் மோசடி