வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் முடக்கப்பட்ட வங்கி கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது

போச்சம்பள்ளி, ஜன.10:  போச்சம்பள்ளியில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, முடக்கப்பட்ட அவரது வங்கி கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.  போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி காந்திபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(26), கூலி தொழிலாளி. இவரது வங்கி கணக்கு திடீரென முடக்கப்பட்டது. இதுகுறித்து வங்கிக்கு சென்று அவர் விசாரித்த போது, அவரது மனைவி சுஜாதா பெயரில், மகளிர் சுயஉதவிக்குழு கடன் ₹5 லட்சம் வாங்கி இருப்பதாகவும், அதை வட்டியுடன் சேர்த்து ₹5.50 லட்சம் கட்டாததால் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாகவும் வங்கி மேலாளர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தனது மனைவி எந்த கடனும் பெறவில்லை என கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த வங்கி மேலாளர், பணத்தை கட்டினால் தான் வங்கி கணக்கு செயல்படும் என கூறி விட்டார். இதனால், ஆவேசமடைந்த விக்னேஷ், கடந்த சில நாட்களுக்கு முன், அந்த வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முடக்கப்பட்ட விக்னேஷின் வங்கி கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கூறுகையில், ‘விக்னேஷின் மனைவி மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கடன் வாங்கி, அதனை கட்டாதது உண்மைதான். இதில் முறைகேடாக ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றது குறித்து விசாரித்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் முறைகேடாக கடன் வாங்கியவர்கள் குறித்து விசாரித்து, போலீசில் புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்,’ என்றார்.

Tags : incident ,plaintiff ,
× RELATED மரக்கட்டையால் தாக்கப்பட்ட...