×

அடையாள மை வைத்த பின், மூதாட்டிக்கு ஏமாற்றம் இறச்சகுளம் வாக்குசாவடியில் கள்ள ஓட்டு

நாகர்கோவில், டிச.31 : இறச்சக்குளம் வாக்குசாவடியில் மூதாட்டியின் ஓட்டை வேறு நபர் பதிவு செய்ததாக கூறி, அடையாள மை வைத்த பின் ஓட்டளிக்க  விடாமல் வெளியேற்றினர். குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, முஞ்சிறை, கிள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆதார் அட்டை, பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஆதாரமாக கொண்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். அந்தந்த வாக்கு சாவடிகளில் உள்ள அலுவலர்கள், முகவர்கள் தங்களிடம் உள்ள பட்டியல் படி, வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்து, மை வைத்த பின், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 4 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர்.இறச்சக்குளம் ஊராட்சிக்கான 5 வாக்குசாவடிகள், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு நேற்று காலை 8.30 மணியளவில் இருந்தே ஏராளமான ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இறச்சக்குளம் மேலத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் (68), என்பவரும் வாக்களிக்க வரிசையில் நின்றார். சுமார் 30 நிமிடம் வரை காத்திருந்து அவர் ஓட்டு போட வாக்கு சாவடிக்குள் சென்றார். அங்கிருந்த அலுவலர்கள் அவர் கொண்டு வந்திருந்த அடையாள அட்டையை சரிபார்த்து, பின் வாக்களிக்க உரிமை உண்டு என்ற அடிப்படையில் அவரது இடது கைவிரலில் மை  வைக்கப்பட்டது.

இதையடுத்து பேச்சியம்மாள் வாக்களிக்க சென்ற போது திடீரென அங்கிருந்த பூத் ஏஜெண்டு ஒருவர், பேச்சியம்மாள் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே அவரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்றார். பின்னர் பதிவேட்டை அதிகாரிகள் பார்த்த போது பேச்சியம்மாள், பெயருக்கு நேராக யாரோ கையொப்பமிட்டு வாக்கு பதிவு செய்து இருந்தனர். இதனால் பேச்சியம்மாளை வாக்களிக்க அனுமதிக்க வில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், என்னுடைய வாக்கை எப்படி வேறு நபர் பதிவு செய்ய அனுமதி அளித்தீர்கள் என கேட்டு வாக்குசாவடி அலுவலரிடம் முறையிட்டார். உடனடியாக போலீசார் வந்து பேச்சியம்மாளை சமாதானம் செய்தனர். அப்போது பேச்சியம்மாள், எனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுள்ளனர். எனது பெயருக்கு நேராக வேறொரு ஆண் நபர் கையொப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் 1 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து இருக்கிறேன். அடையாள  மை வைத்த பின் எனக்கு ஓட்டு இல்லை என எப்படி கூற முடியும் என்றார்.  உடனடியாக அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் பேச்சியம்மாளிடம் பேசி, அவரது மொபைல் எண்ணை வாங்கி, மாலையில் உங்களை வாக்களிக்க அழைக்கிறோம். இப்போது வீட்டுக்கு செல்லுங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்ட போது, பேச்சியம்மாள் வாக்கு சாவடி மாறி வந்து இருக்கலாம். பேச்சியம்மாள் என்று பெயர் கூறியதும், அவசரப்பட்டு மை வைத்து இருப்பார்கள். விசாரணைக்கு பின் தான் எதையும் தெரிவிக்க முடியும் என்றனர்.

Tags : grandfather ,
× RELATED பவானி அருகே கொண்டாடப்பட்ட தாத்தா,...