×

வாக்குப்பதிவில் முறைகேடு? வாக்குச்சாவடி முகவர்கள் பரபரப்பு புகார்

கடலூர், டிச. 30: கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தப்பட்டு ஊராட்சியில்(7வது வார்டு) கடந்த 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 4 வார்டு உறுப்பினர்கள், 3 ஊராட்சி மன்ற தலைவர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். மாலை 5 மணிக்கு வழக்கம் போல வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தல் முடிந்த நிலையில் விதிமுறைகளின்படி வாக்குச்சாவடி அலுவலர், படிவம்20ல் வாக்குச்சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகின, அதில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை எழுதி கையொப்பமிட்டு ஏஜெண்டுகளிடம் கொடுக்க வேண்டும்.
ஆனால் அன்றைய தினம் தேர்தல் அலுவலர்கள் விண்ணப்ப படிவம் கொடுக்காமல் துண்டு சீட்டில் எத்தனை நபர்கள் வாக்களித்தார்கள் என்பது குறித்து எழுதி விட்டு சென்று விட்டனர்.

இதர வாக்குச்சாவடிகளில் படிவம் 20 முறையாக கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நத்தப்பட்டு வாக்குச்சாவடியில் மட்டும் படிவம் 20 தராதது வாக்குச்சாவடியில் பணியாற்றிய ஏஜெண்ட்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் நேற்று கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். விண்ணப்ப படிவம் 20 வழங்கப்படாதது குறித்து அதிகாரிக்கும் புகார் தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலளித்த அதிகாரிகள், படிவம் 20  இனி வழங்க முடியாது. ஆனால் அந்த வாக்குச் சாவடியில் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஜெண்ட்கள், மற்ற வாக்குச்சாவடிகளில் இந்தப் படிவம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் எங்கள் வாக்குச்சாவடிகளில் மட்டும் இந்த படிவம் வழங்கப்படாதது ஏன், இது சம்பந்தமாக எங்களுக்கு பதில் கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு கூறுகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் 20 வழங்கப்படாதது நத்தப்பட்டு வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய ஏஜெண்ட்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கடன் தொகைக்காக பெண்ணை வெளியே அனுப்பி...