×

காடையாம்பட்டி அருகே பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்

காடையாம்பட்டி, நவ.26:  காடையாம்பட்டி அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பண்ணப்பட்டி கிராமத்தில் இருந்து தாராபுரம் கிராமத்திற்கு செல்லும் வழியில், புதுக்கோட்டை மாரியம்மன் கோயில் என்னுமிடத்தில் மேற்கு சரபங்கா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வழியாகவே தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி, கொங்குப்பட்டி, நல்லூர், வெள்ளார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் ஆற்றை கடந்தே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், சரபங்கா ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் 6 கிராமங்களுக்கும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். இதனால், தண்ணீர் வடியும் வரை 4 மாதங்களுக்கு, பல கி.மீ., சுற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி வழியாக பள்ளி- கல்லூரிகளுக்கும், இதர பணிகளுக்கும் சென்று வருகின்றனர்.

எனவே, சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் திமுக எம்.பி. பார்த்தீபன், பாலம் கட்டுமான பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதி ₹35 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, பாலம் கட்டுமான பணி தொடங்கியது. சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், பார்த்திபன் எம்.பி. ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சின்ராசு, ரவிச்சந்திரன், அண்ணாமலை, திருநாவுக்கரசு, ராஜேந்திரன், அறிவழகன், குருநாதன், சந்திரமோகன், நைனாகுமார், குட்டி, தங்கம், சுந்திரராஜன், மகாராஜன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,Kadaiyampatti ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...