கோவை, நவ.22: வரி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் சப்கா விஸ்வாஸ் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி இந்த திட்டம் அமலானது. வரும் டிசம்பர் இறுதி வரை இந்த திட்டம் தொடரும். வரி செலுத்துவோர் தங்களது வரி நிலுவை தொடர்பான வழக்குகளுக்கு இதில் தீர்வு காண முடியும். சேவை வரி, கலால் வரி, ஜி.எஸ்.டி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. முந்தைய கலால், சேவை வரி வழக்குகளுக்கு இந்த திட்டம் நல்ல தீர்வாக அமையும். வழக்குகளுக்கு தீர்வு, பொது மன்னிப்பு என இரு வகையில் வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது. வட்டி, அபராதம் முற்றிலும் விலக்கப்படுகிறது. அனைத்து வழக்குகளுக்கும் 50 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால் செலுத்தவேண்டிய வரியில் 70 சதவீத நிவாரணம் வழங்கப்படும். 50 லட்ச ரூபாய்க்கு மேல் என்றால் 50 சதவீத நிவாரணம். விசாரணை, தணிக்கையில் உள்ள வழக்குகளுக்கு வரி செலுத்துவோர் எவ்வளவு வரி தரவேண்டும் என நடப்பாண்டில் ஜூன் 30ம் தேதி முன் ெதரியப்படுத்தியிருந்தால் அதே நிவாரணம் பொருந்தும். நிலுவை தொகை உறுதி செய்யப்பட்டு, மேல் முறையீடு நிலுவையில் இல்லை என்றால் 50 லட்ச ரூபாய்க்கு 60 சதவீத நிவாரணம், 50 லட்சத்திற்கு மேல் என்றால் 40 சதவீதம் நிவாரணம் தரப்படும் என ஜி.எஸ்.டி இணை கமிஷனர் வம்சாதாரா தெரிவித்துள்ளார்.