×

சேலம் அருகே அதிவேகத்தில் வந்ததால் விபத்து: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

இளம்பிள்ளை, நவ.13: சேலம் அருகே போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியவாறு அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய காரை பொதுமக்கள் மடக்கினர். காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அருகே காக்காபாளையம் பகுதியிலிருந்து நேற்று மாலை இளம்பிள்ளை நோக்கி மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்தது. வேலகவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது தறிகெட்டு ஓடிய அந்த கார், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. இதில், 2 குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் காயமடைந்த நிலையில், கார் நிற்காமல் சென்றது. இதனைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள், டூவீலர்களில் துரத்திச்சென்று சற்று தொலைவில் காரை மடக்கி பிடித்தனர். விலை உயர்ந்த அந்த சொகுசு காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதனைக்கண்டதும் அந்த கார் போலீஸ் உயரதிகாரிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம். அதில், போலீஸ் அதிகாரி குடும்பத்தினர் வந்திருக்கலாம் என தகவல் பரவியது.

அப்போது, காரில் இருந்து ஒருவன் கீழே குதித்து ஓட்டம் பிடித்தான். இதனால், அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில், காரில் 3 பேர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ஒருவன் தப்பி ஓடிவிட்ட நிலையில், குடிபோதையில் இருந்த மற்ற இருவரையும் மீட்டு விசாரித்தனர். இதில், அந்த கார் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. குஜராத்தில் ஓட்டல் நடத்தி வரும் இவர், அங்கு இந்த காரை வாங்கி பதிவு செய்துள்ளார். சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு காரை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காரில் இருந்த இருவர் மீதும் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : car accident ,Salem ,public ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...