×

தீபாவளி பண்டிகையையொட்டி சாத்தனூர் அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை,அக்.27: திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி சாத்தனூர்அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மதுபாட்டில், பட்டாசு எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், விடுமுறை மற்றும் விழாக்கால கொண்டாட்டங்களுக்கு போதிய சுற்றுலா தலங்கள் இல்லை. எனவே, இந்த மாவட்டத்தின் பிரதான பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை மட்டுமே அமைந்துள்ளது. எனவே, புத்தாண்டு, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி இன்று ஏராளமான பொதுமக்கள் இங்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 85.30 அடி தண்ணீர் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் சாத்தனூர் அணை பகுதி பசுமை நிறைந்து சுற்றுலா பயணிகளின் மனம் கவரும் வகையில் உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களின் பொழுதுபோக்கை மகிழ்ச்சியோடு கழிக்க கடந்த ஆண்டை இந்த ஆண்டு அதிகம் வருவார்கள். அதுமட்டுமின்றி அங்குள்ள பூங்காக்களை ரசிக்கவும், முதலைப்பண்ணை உள்ளிட்டவைகளை பார்வையிடவும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

எனவே, சுற்றுலா தளமான சாத்தனூர் அணை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபாட்டில்கள், பட்டாசுகள் ஆகியவை அணைபகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் நுழைவு வாயிலில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கவும், ரோந்துப்பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

Tags : festival ,Sathanur Dam ,Diwali ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!