×

சப்- இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு வந்தவாசியில் வக்கீல் தாக்கப்பட்ட வீடியோ வைரல்

வந்தவாசி, மே 17: வந்தவாசியில் வக்கீல் தாக்கப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சேதராகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(25). இவர் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி வந்தவாசி டவுன் தேரடி பகுதிக்கு பைக்கில் சென்றார். அங்கு தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்பூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(21) என்பவர் 3 நபர்களுடன் பைக்கில் வந்தார்.

அவர்களை போலீசார் மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த வக்கீல் பாலமுருகன் மணிகண்டனுக்கு ஆதரவாக சப்- இன்ஸ்பெக்டர் ராமுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், போலீசாரை வேலை செய்யவிடாமல் தடுத்து அவரது சட்டையை பிடித்து இழுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மறுநாள் கிருஷ்ணாவரம் கூட்ரோடு அருகே தெற்கு போலீசார் வக்கீல் பாலமுருகனை கைது செய்ய முயன்றபோது, அவர் போலீசாரை ஆபாசமாக பேசி தாக்கினாராம்.

தொடர்ந்து, போலீசாரும் பாலமுருகனை தாக்கினார்களாம். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து, இதுகுறித்து போலீஸ் ஏட்டு ராமதாஸ் வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், போலீசாரை தாக்கிய வக்கீல் பாலமுருகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். ஏற்கனவே வந்தவாசி தெற்கு போலீசார் பதிந்த வழக்கில், பாலமுருகன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போலீசார் வக்கீலை தாக்கிய சம்பவம் தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் ராமு, போலீஸ் ஏட்டுக்கள் எல்லப்பன், ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோரை திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

The post சப்- இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு வந்தவாசியில் வக்கீல் தாக்கப்பட்ட வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Karthikeyan ,Balamurugan ,Setaraguppam ,Thiruvannamalai district ,Chennai ,
× RELATED வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி